ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் கொள்ளை முயற்சி
கோவை; கோவை, சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகரை சேர்ந்தவர் குமார், 72. மத்திய அரசின் பி.எப்., அலுவலகத்தில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில தினங்களுக்கு முன் குமார் சொந்த வேலையாக, சென்னை சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். கடந்த, 19 ம் தேதி இரவு மர்ம நபர், குமா ரின் வீட்டிற்கு கொள்ளையடிக்கும் நோக்கில் நுழைந்து வீட்டின் கதவுகளை திறக்க முயற்சித்துள்ளார். அம்முயற்சி தோல்வியடைந்ததால், ஜன்னல் வழியாக கதவைத் திறந்து உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். அதுவும் நிறைவேறவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவை திரும்பிய குமார், முன்பக்க கதவின் பூட்டு சேதமடைந்து இருப்பது குறித்து மனைவியிடம் கேட்டார். அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதையடுத்தே, இரவில் கொள்ளையன் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது தெரிந்தது. பின்பக்க கதவு மற்றும் ஜன்னல் பகுதிகளும் உடைந்து இருந்ததை கண்டு, ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.