மேட்டுப்பாளையம்: காரமடை நகரில், கோவை, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம், கன்னார்பாளையம் ஆகிய முக்கிய நான்கு சாலைகள், மிகவும் குறுகலாக உள்ளன. இந்த சாலைகளில், தினமும் காலை, மாலை நேரங்களிலும், முகூர்த்த நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, 28.93 கோடி ரூபாய் மதிப்பில், மேட்டுப்பாளையம் - - காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரயில் பாதையை கடந்து, தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், மேம்பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மேம்பாலத்தின் இரு பக்கம், மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும் இன்னும் ரவுண்டானா அமைக்கவில்லை. பாலம் கட்டியும் பொது மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (பாலம் கட்டும் பிரிவு) கூறுகையில், 'காரமடை தோலம்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம் ஆகிய இரண்டு சாலைகளிலும், ரவுண்டானா அமைக்கப்படும். மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து, அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் வைத்து டிசம்பர் முதல் வாரத்தில், ரவுண்டானா அமைக்கும் பணிகள் துவங்கும்' என்றனர்.