| ADDED : ஜன 20, 2024 02:36 AM
கோவை;ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்து கோவையில் நேற்று ஊர்வலம் சென்றனர். பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் கல்லுாரி முன் துவங்கிய ஊர்வலம், வடக்கு தாலுகா அலுவலகம் முன் முடிந்தது. மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சாந்தி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பலராமன், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கட சுப்ரமணியன், மாவட்ட தலைவர் வீரபத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சத்யபாமா நன்றி கூறினார்.