| ADDED : பிப் 18, 2024 02:38 AM
கோவை;அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின், சட்ட மாணவர்கள் மாநில மாநாடு, கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள, கோ-இந்தியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.'அரசியலமைப்புச் சட்டம் எனும் பேராயுதம்' என்ற தலைப்பில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேசியதாவது:அரசியலமைப்புச் சட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுத்த அம்பேத்கர், இந்திய மக்கள் சமூக, பொருளாதாரத்தில் விடுதலை பெறவில்லையெனில் அரசியலமைப்புச் சட்டம் நொறுங்கி விடும் எனக் கூறியிருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தை, உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு பதவிக்கு வந்தவர்களால், அச்சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அச்சட்டம், வேறு திசையில் திரும்புவதையும் பார்க்க முடிகிறது. நாம் அனைவரும் படிக்க வேண்டும். நாட்டில், 75 ஆண்டுகள் ஆகியும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருக்க ஒரே காரணம் அம்பேத்கர். மக்களின் கையில் தான் உரிமை உள்ளது என்பதை, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நிறுவியவர் அவர். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, மாவட்ட செயலாளர் பிரசாந்த், சட்ட மாணவர்கள் குழு தலைவர் சினேகா, அனைத்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.