மேலும் செய்திகள்
ராமர் - சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்
07-Apr-2025
கோவை; ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், நேற்று சீதாகல்யாண வைபவம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீராமநவமி விழாவை தொடர்ந்து, பங்குனி உத்திர நட்சத்திரமான நேற்று, சீதா கல்யாண வைபவம், வைதீக முறைப்படி விமரிசையாக நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவிலில் உள்ள அபிநவ வித்யா தீர்த்த மண்டபத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முதலில், விஸ்வக்சேனர் ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி சீதாதேவி ஆகியோர், மலர் அலங்காரத்தில் மண்டபத்தில் பட்டாடை அணிவிக்கப்பட்டு எழுந்தருளுவிக்கப்பட்டனர். இதில் கங்கனதாரணம் என்னும் கன்னிகாதானம், பாதிகாவந்தனம் எனும் முளைப்பாரி சமர்ப்பித்தல், ஜானவாசம் எனும் காசியாத்திரை செல்லுதல், மாப்பிள்ளை அழைப்பு, பாதபூஜை செய்தல், மாப்பிள்ளைக்கு புதிய வஸ்திரம் சமர்ப்பித்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை ஜெபிக்க, யாகசாலையிலிருந்து அக்னி எழுந்தருள, அக்னி சாட்சியாக சீதாதேவிக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, திருமாங்கல்ய பூஜையுடன் சப்தபதி நடந்தது.நிறைவாக, பக்தர்கள் மற்றும் வேதவிற்பன்னர்கள் வாரணமாயிரம் பாசுரத்தை சேவித்து, திருக்கல்யாண வைபவத்தை ஆசீர்வதித்தனர். அப்போது பூப்பந்து வீசுதல், தேங்காய் உருட்டும் வைபவங்கள் நடந்தன.
07-Apr-2025