கவுமார மடாலயத்தில் சூரசம்ஹார விழா
கோவை: சின்னவேடம்பட்டியில் கவுமார மடாலயத்தில், தண்டபாணி சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கி, சூரசம்ஹாரம் வரை சிறப்பான நிகழ்வுகள் இங்கு நடக்கின்றன. சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவங்கிய சூரசம்ஹார விழா, அசுரனை வதம் செய்யும் நிகழ்வோடு நிறைவுற்றது. திருத்தேரில் தண்டபாணி சுவாமிகள் புறப்பாடு மாலை 4.30 மணிக்கு நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்து, தேரை வடம் பிடித்து சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். திரளாக கூடியிருந்த சிறுவர், சிறுமியர், பல்வேறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து நடந்த சூரசம்ஹாரத்தை, மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து வணங்கினர்.