அன்னுார்:அன்னுார் பேரூராட்சி குமரன் நகரில், அதிகளவில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சாலையோர தோட்டம் என மக்கள் அசத்துகின்றனர்.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஏழு வார்டுகள் கிராமப்புறங்களிலும், எட்டு வார்டுகள் நகர்ப்புறத்திலும் உள்ளன. இங்கு வீடு, வீடாகச் சென்று, தினமும் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரிக்கின்றனர்.பெரும்பாலான வார்டுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என ஒன்றாக சேர்த்தே வழங்கி வரும் சூழலில், கோவை சாலையில் உள்ள குமரன் நகர் மற்றும் மாரியப்பா காலனி மக்கள், 90 சதவீதம் பேர், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து வழங்கி, திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். மீதமுள்ளவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இப்பகுதி மக்கள், சுவற்றை ஒட்டிய பகுதிகளில் குப்பை கொட்டாமல் இருக்க, பூச்செடிகளை வளர்க்கின்றனர். குறைந்தது 50 சதவீதம் வீடுகளில் வீட்டின் முன்புறம் பூச்செடிகள், காய்கறி செடிகள், மூலிகைச் செடிகள் வளர்க்கின்றனர். பலர் தங்கள் வீட்டு மாடியிலும், வீட்டில் உட்புறத்திலும் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ரேவதி கூறுகையில், ''இப்பகுதியில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வசித்து வருகிறோம்.எனவே, இங்கு மரக்கன்றுகள் நடுவது, செடிகள் வளர்ப்பது, திடக்கழிவு மேலாண்மை என ஆர்வம் காட்டி வருகிறோம். மற்ற பகுதிகளுக்கு, குமரன் நகர் மற்றும் மாரியப்பா காலனி ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இங்கு சாலையோரத்தில் குப்பை மேடுகளை பார்க்க முடியாது. இங்கு பெரும்பாலானோர் குப்பைகளை வீட்டிலிருந்து தரும்போதே, எளிதில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரித்து தருவதால், துாய்மை பணியாளர்களுக்கான பணி எளிதாகிறது,'' என்றார்.