உங்களுடன் ஸ்டாலின் 2ம் கட்ட முகாம் அறிவிப்பு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அடுத்த கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தேதியை ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது. இதில், முதற்கட்டமாக வடபுதூர், கோவில்பாளையம், நெ.10.முத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முகாம் நடந்தது. முகாமில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், போக்குவரத்து துறையும் இருந்தால், பஸ் சார்ந்த புகார்களை மனுவாக வழங்கி தீர்வு காணலாம். எனவே, இனி வரும் முகாம்களில் போக்குவரத்து துறை சார்பில் அதிகாரிகள் பங்கேற்றக வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக வரும் 22ம் தேதி காட்டம்பட்டி ஊராட்சிக்கு சமுதாய நல கூடத்தில் முகாம் நடக்கிறது. 29ல், செட்டியக்காபாளையம் ஊராட்சிக்கும், செப். 2ல் நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு அர்ஜுன் கல்லூரியில் முகாம் நடக்கிறது. செப். 9ம் தேதி வடசித்தூர், குருநல்லிபாளையம் ஊராட்சிக்கும், செப். 12ம் தேதி கோதவாடி ஊராட்சிக்கும், வடசித்தூரில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடக்கிறது. முகாமில், 13 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அந்தந்த பகுதிகளில் நடக்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மக்கள் பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகள், மானியங்கள், உதவித்தொகைகள், மின்தொடர்பான பிரச்னைகள், பிறப்பு, இறப்பு சான்று, சொத்துவரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி, ஜாதி மற்றும் வருமான சான்று, சிறுகுறு விவசாய சான்று உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.