பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய உணவு தயாரிக்கப்பட்டாலும் அவற்றை வீணடிக்காமல் இருக்க, பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்கள் உட்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,- மாணவியருக்கு, சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்பு வாயிலாக உரிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பெறப்படுகின்றன. இதற்காக, முன்னதாகவே, வகுப்புகள்தோறும், சத்துணவு உண்ணும் மாணவர்களின் விபரம் கோரப்படுகிறது. அதற்கேற்ப மதிய உணவும் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நிர்ணயிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கைக்கு, கூடுதலாகவே மதிய உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில மாணவர்கள், சரிவர உணவு உண்ணாதிருத்தல், விடுப்பு போன்ற காரணங்களால் தயாரிக்கப்படும் உணவு வீணாகி விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, சில மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில், தலைமையாசிரியர் அனுமதியின் பேரில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறது. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள், பற்றாக்குறையின்றி திருப்தியாக மதிய உணவு உட்கொள்ள வேண்டும். இதற்காக, கூடுதலாகவே மதிய உணவு சமைக்கப்படுகிறது. இதன் காரணமாக, சில பள்ளிகளில் மதிய உணவு மீதமாகிறது. அவற்றை வெளியே கொட்டுவதை தவிர்க்கும் பொருட்டே, பிற வகுப்பு மாணவர்கள் உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதனால், உணவு வீணாக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது,' என்றனர்.