| ADDED : நவ 26, 2025 07:14 AM
கோவை: கோவையில் என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், மாவட்ட பள்ளிக்கல்வி துறை தொடர்ந்து பயிற்சி வழங்கி வருகிறது. பேரூர், தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், கல்வியில் சிறந்து விளங்கும், 50 மாணவ-மாணவிகள்(ஒவ்வொரு பள்ளியிலும்) தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்படுகிறது. 600 மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வாரந்தோறும் மனத்திறன் மற்றும் படிப்புத் திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட திட்ட அலுவலர் கூறுகையில், 'என்.எம்.எம்.எஸ்., தேர்வில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோவையில் இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது' என்றார்.