- நிருபர் குழு -பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 3,345 மாணவர்கள், 4,045 மாணவியர் என மொத்தம், 7,390 பேர் மார்ச் மாதம் நடைபெறும், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.இதே போன்று, பிளஸ் 1 பொதுத்தேர்வை, 3,611 மாணவர்கள், 4,009 மாணவியர் என மொத்தம், 7,620 பேர் எழுதுகின்றனர்.இவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த பாடங்களுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. மாணவ, மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர்.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 67 மையங்களில் செய்முறை தேர்வு நடக்கிறது. அதில், பிளஸ் 2 மாணவர்கள், 3,127, மாணவியர், 3,705 என மொத்தம், 6,832 பேர் செய்முறை தேர்வு எழுதுகின்றனர்.செய்முறை தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (நேற்று) முதல் வரும், 17ம் தேதி வரை, 35 மையங்களில் நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக, 32 மையங்களில் நடக்கிறது. இதே போன்று பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வும் நடைபெறுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். உடுமலை
உடுமலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் நேற்று துவங்கியது.உடுமலை கோட்டத்தில், 30 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறைத்தேர்வுகள் நடக்கின்றன.இரண்டு கட்டங்களாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் நடக்கிறது.முதற்கட்டமாக, பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட சில பள்ளிகளில் நேற்று தேர்வு நடந்தது. மீதமுள்ள பள்ளிகளுக்கு, நாளை இரண்டாம் சுழற்சியில் செய்முறைத்தேர்வு நடக்கிறது.