கோவை;மாவட்ட அளவிலான புத்தாக்க ஆய்வு விருது போட்டி, நேற்று, அவினாசி ரோட்டில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நடந்தது. இதில், மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.தேசிய அறிவியல் புத்தாக்க துறை மற்றும் தேசிய புத்தாக்க ஆய்வு நிறுவனத்துடன், மாநில பள்ளிக்கல்வித்துறை இணைந்து, பள்ளி மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணர, 2009 முதல், புத்தாக்க ஆய்வு விருது போட்டி நடத்தி வருகிறது.கடந்த கல்வியாண்டுக்கான, மாவட்ட அளவிலான புத்தாக்க ஆய்வு விருது போட்டி, அவினாசிரோடு, மண்டல அறிவியல் மையத்தில், நேற்று நடந்தது.இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட வாரியாக பங்கேற்றவர்களில், 10 சதவீத படைப்புகள், மாநில அளவிலான சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படும் என, மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) வள்ளி தெரிவித்தார்.மாணவர்களின் படைப்புகளை, நேஷனல் இன்னோவேஷன் சென்டர் ஒருங்கிணைப்பாளர் விரல்சவுத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் லெனின்பாரதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.