ஜி.ஆர்.ஜி., பள்ளி
பீளமேடு ஜி.ஆர்.ஜி., பள்ளியின் நிறுவனரான மறைந்த ஜி.ஆர். கோவிந்தராஜுலு 105வது பிறந்த நாள் விழா, பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.இதில், மாணவர்களுக்கு கலை, திறனாய்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் பல நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. வரும் 26ம் தேதி டில்லி குடியரசு தின அணிவகுப்பில், ஐந்து தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி சம்யுக்தாவை, பள்ளி முதல்வர் சரவணகுமார் கவுரவித்தார். நாகினி வித்யாலயா
நாகினி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 590 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பார்த்தசாரதியை, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் வள்ளிமுருகன் கவுரவித்தார். நிகழ்வில், பள்ளி செயலர் மூர்த்தி, துணை செயலர் பாரதி, முதல்வர் அன்னபூரணி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.ஐ.ஓ.ஏ.,பள்ளிகள்
பட்டணம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ.,பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், ஐந்தாவது விளையாட்டு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, கோவை நான்காவது படைப்பிரிவின் தேசிய மாணவர் விமானப்படைப் பிரிவு கமாண்டர் பர்குணன், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளையின் செயலர் ஜோசப் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்தார்.சிறப்பு விருந்தினர் கமாண்டர் பர்குணன் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் உடலையும், மனதையும் உறுதியாக்க, மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர் முருகேசன், எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளையின் தலைவர் செந்தில் ரமேஷ், எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளியின் முதல்வர் ஷோபா, உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ், ஸ்டெபி லுாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.