-நமது நிருபர் குழு-காட்டம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர், மூவர், தேசிய வருவாய் வழி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு, அரசு உதவி பெறும் நடு நிலை, உயர் நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நான்காண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. பிப். 3ம் தேதி நடந்த இந்த தேர்வில் இரண்டு லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது.இதில் காட்டம்பட்டி சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மூவர் தேர்ச்சி பெற்று, உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இப்பள்ளியைச் சேர்ந்த மாணவியர் நிகாசினி, சுபமதி, மாணவர் நிகில் ஆகிய மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மூவருக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கணியூர் ஊராட்சி செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் முத்துக்கண்ணன், ஜெனிலியா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். வெற்றி பெற்ற மூவருக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கவுரிசங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூவர் தேர்ச்சி பெற்றனர். இந்த மூன்று மாணவர்களுக்கும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.