ஆனைமலை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், ஆனைமலை ஒன்றிய மாநாடு, கோட்டூரில் நடந்தது. தாலுகா தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பெரியசாமி, ஆனைமலை தாலுகா சங்க துணைத்தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் கோபிநாத், அங்கலக்குறிச்சி கிளைத்தலைவர்கள் யுகேந்திரன், ராமமூர்த்தி, பொறுப்பாளர் காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட தலைவர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வனம், மற்றும் வனவிலங்குகளின் வழித்தடங்களை அழிப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தணும். மத்திய அரசை வலியுறுத்துவது போன்று, தமிழக முதல்வரும், விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குகிறது; விவசாயிகள் கோரிக்கைகளை நிராகரித்தால், தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தாமதப்படுத்தாமல், விரைந்து செயல்படுத்த வேண்டும். பாலுக்கான ஆதார விலை உயர்த்த வேண்டும். வனவிலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு, நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும். தென்னை வாடல் நோயால் பாதித்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு, 1,000 ரூபாய் போதுமானதல்ல; 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் உயிரிழப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்று இருப்பதை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு, தினமும் ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.