உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை

 சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை

பொள்ளாச்சி: தமிழகத்தில், சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரித்து, மாவட்டந்தோறும் உள்ள சுற்றுலாத்துறை இணையதளத்தில் அவர்களின் பெயர் விபரத்தை பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுற்றுலா வழிகாட்டிகள், மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றனர். உள்ளூர், பிராந்தியம், மொழி திறன் சார் என, வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள், சுற்றுலா பயணியருக்கு ஒரு குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்களையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர். வரலாற்றுத் தளங்கள், அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள் போன்ற இடங்கள் குறித்து விரிவான தகவல்களை அளிக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில், தகுதியான சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரித்து, மாவட்டந்தோறும் சுற்றுலா சார்ந்த இணையதளத்தில் அவர்களின் பெயர் விபரத்தை பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான சுற்றுலா வழிகாட்டிகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, உரிய தகுதி மற்றும் அங்கீகாரத்தை பெற்றிருப்பர். அதன்படி, தமிழகத்தில், பெரிய அளவிலான புராதான கோவில்களில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். இந்நிலையில், மாவட்டந்தோறும், சுற்றுலா வழிகாட்டிகளை பதிவு செய்ய அறிவுறுத்தி, உரிய பயிற்சி அளிப்பதுடன், பிரிவுகளின் அடிப்படையில் அவர்களின் பெயர் விபரம், மாவட்ட சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பதிவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, சுற்றுலா சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பங்களிப்போடு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ