| ADDED : டிச 25, 2025 05:04 AM
கோவை: அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி கோவையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த, ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும், ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் எவ்வித சிறப்பு வகுப்புகளையும் விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த தலைமையாசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆசிரியர்களை பள்ளிக்கு வருமாறு தலைமையாசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். கல்வித்துறையின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது, மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கின்றனர் இவர்கள்.