கோவை:'உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ரூ.20 கோடியில் நவீன முறையில் சீரமைக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணிக்காக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவர், நுழைவாயில், வணிக வளாகம் மற்றும் பிளாட்பாரங்கள் இடித்து அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் துாண்கள் எழுப்பப்பட்டு, ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.இப்பணிகளுக்கு இடையே பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி, இறக்கப்பட்டு வருகின்றனர். பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் போதிய வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் நனைந்து கொண்டே பஸ்களுக்கு காத்திருக்கும் சூழல் இருக்கிறது. தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது; நிழற்கூரை வசதி இல்லாததால், வெப்பத்தை தாங்கிக் கொண்டு நிற்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. முதியவர்கள், சிறியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போதாக்குறைக்கு நெருக்கடியான இடத்தில் டீக்கடைகள் நடத்துவதற்கும் மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு தீர்வு காண, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தனியார் ஏஜன்சிக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இச்சூழலில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகம் ரூ.20 கோடியில் நவீன முறையில் சீரமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை சீரமைப்பது தொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். ''விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும். தற்போது பயன்படுத்தும் அனைத்து பஸ்களும் நிறுத்துவதற்கேற்ப வசதிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படும்,'' என்றார்.
ரூ.10 கோடியில் ஹாக்கி மைதானம்
அ.தி.மு.க., ஆட்சியில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதற்காக, 4.5 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 1.5 கோடி ரூபாயை செலவழித்துள்ள நிலையில், நிர்வாக சிக்கல் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021 ஜூலை 2ல், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நேரில் ஆய்வு செய்து, உலகத்தரத்துக்கு இணையாக ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், எதுவும் செய்யவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, 10 கோடி ரூபாய் செலவில், ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.