கோவை;கோவையில் குழந்தைகளை குதூகலத்தில் ஆழ்த்திய, சர்வதேச நடன, நாட்டிய, நகைச்சுவை காட்சி நேற்று நிறைவு பெற்றது.கோவை சத்தி ரோட்டில் உள்ள புரோசோன் மால், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஏதாவது ஒரு புதுமையான நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த முறை பொங்கலை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ், சந்திரமரி பப்ளிக் ஸ்கூல், புரோசோன் மால் இணைந்து, இரண்டு நாள் நடன, நாட்டிய மேஜிக் ஷோ, 'சர்வதேச கிளவுன் காட்சியை' நடத்தின.பெரு, இங்கிலாந்து, கனடா, இந்திய நாட்டுக் கலைஞர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் ரசிக்கும் வகையில் பந்து விளையாட்டு தட்டு விளையாட்டு, நடனங்கள், பாடல்கள், அக்ரோபேட் போன்ற நிகழ்வுகள் நடந்தன.இரண்டு நாட்கள், ஆறு காட்சிகளை, ரெட் நோசஸ், பிக் டீயர்ஸ் குழுவினர் நடத்தினர். நிகழ்வை பெற்றோர், குழந்தைகள் அதிகம் பேர் கண்டு ரசித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் நிகழ்வின் இறுதியில் நடனமாடி மகிழ்ந்தனர்.பங்கேற்ற கலைஞர்கள் வினாடிப் பொழுதையும் வீணாக்காமல், பார்வையாளர்களின் கவனத்தை முற்றிலுமாக கவர்ந்தனர். ஒவ்வொரு காட்சியும் இரண்டு மணி நேரம் நடந்தாலும், இரண்டே நிமிடங்களில் முடிந்தது போன்ற உணர்வு இருந்ததாக, பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இரண்டு நாள் காட்சி, நேற்று மாலை நிறைவுற்றது.