'மு ண்டாசு' என்ற வார்த்தையை கேட்டாலே, தமிழர்களுக்கு பாரதி நினைவுக்கு வருவது இயல்பு. கோவையிலும் ஒரு முண்டாசுக்காரர் இருந்தார். அவர், திருவேங்கடசாமி. மறக்கப்படவே கூடாத ஒரு மனிதர். கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், கோவை நகரசபையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகள் நகர சபையை வழிநடத்திய, பெரும் தலைவர் அவர். ஆற்காடு தொப்பையப்ப முதலியாரின் மகனாகப் பிறந்திருந்தாலும், செல்வத்தை தனக்கென வைத்துக்கொள்ளாமல், பொது நலனுக்காக செலவழிப்பதில் சிறந்த கொடையாளியாக இருந்தவர். பெரிய ஆஸ்பத்திரிக்குப் பிரசவ அறை கட்ட உதவி செய்ததும், டவுன்ஹால் ஒளிபெற மணிக்கூண்டை நிர்மாணித்ததும், அதன் கீழ் முதல் பொது நுாலகத்தை அமைத்ததும் அவர்தான். ஆர்.எஸ்.புரத்தில், ஒரு சாலைக்கு 'திருவேங்கடம் ரோடு' என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பது, அவர் கோவைக்கு செய்த சேவையின் கவுரவம். ஒருகாலத்தில், டவுன்ஹால் மணிக்கூண்டின் முன், தலையில் முண்டாசும், கையில் செங்கோலும் தாங்கிய அவரது சிலை, நகரத்தின் வரலாற்றை தாங்கி நின்றது. இன்று அந்தச் சிலை இல்லை; சிலை அகன்றாலும், அவர் விட்டுச் சென்ற சேவையின் தடங்கள், நகரின் பல இடங்களில் இன்னும் பேசப்படுகின்றன. நகரம் வேகமாக மாறினாலும், அதன் வேர்களை போற்றாமல் விட்டால், வரலாறே மவுனமாகி விடும். திருவேங்கடசாமி, கோவையின் சிற்பிகளில் ஒருவர். அவரை மறந்தாலும், அவர் நமக்காக கட்டி வைத்த மணிக்கூண்டு, இன்னும் நேரத்தைச் சொல்லி நினைவூட்டுகிறது.