உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அப்போ செந்தில் -- கவுண்டமணி  இப்போ வி.ஜே சித்து - ஹர்ஷத் கான் !

அப்போ செந்தில் -- கவுண்டமணி  இப்போ வி.ஜே சித்து - ஹர்ஷத் கான் !

ஒரு காலத்தில் செந்தில் -- கவுண்டமணி எப்படியோ, அப்படித்தான் தற்போது, 'யூடியூப்'ல் வி.ஜே. சித்து மற்றும் அர்ஷத் கான் ஜோடி என்கின்றனர், 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ். இன்ஸ்டாகிராம், யூடியூப் என பெரும்பாலான நேரங்களை, சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர் இளைஞர்கள். அப்படி, சமீப காலமாக பலரின் மனதில் உள்ள காயங்களுக்கு, தங்கள் நகைச்சுவையால் மருந்து போட்டு இளைஞர்கள் மட்டுமல்லாமல், பல லட்சம் மக்களின் மனதை கவர்ந்தவர்கள்தான், 'வி.ஜே., சித்து விளாக்ஸ்' யூடியூப் சேனல் குழுவினர். தங்களின் ஒவ்வொரு வீடியோவிலும், ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன், நட்பு, பாசம், சமூக அக்கறை என, பல்வேறு கருத்துக்களை கூறி சிந்திக்கவும் வைக்கின்றனர். இவர்கள்தான், இந்தியாவிலேயே நம்பர் 1 'யூடியூப் விளாகர்'. தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்க, சித்து மற்றும் ஹர்ஷத் ஆகிய இருவரும் கோவை வந்திருந்தனர். சித்து கூறுகையில், 'நாங்கள் பெரிதாக எதும் யோசித்து செய்வது இல்லை. நான்கு நண்பர்களுக்கு நடுவில் நடக்கும் விஷயங்களைதான், வீடியோவாக போடுகிறோம். எங்களுக்கு இத்தனை மக்கள் ஆதரவு தருவதை பார்க்கும் போது, அவர்களை சிரிக்க வைப்பதற்கான வேலையை, தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில், தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் போது, இதே கல்லுாரியில் கலை விழா நடந்தது. அப்போது, பின்னாடி இருந்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நான்தான், இன்று இந்த மேடையில் நிற்கிறேன். மனதுக்கு பிடித்ததை செய்யும், ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.சித்து மற்றும் ஹர்ஷத் கானை, 'யூடியூப் செந்தில் - கவுண்டமணி' என, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' வைரலானது குறித்து சித்து, ''எனது வாழ்க்கையில் அதிகபட்ச ஆசையே, கவுண்டமணி சாரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பது தான். எங்களை அவர்களுடன் ஒப்பிடுவதை பார்க்கும் போது, பயம்தான் வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை