| ADDED : பிப் 24, 2024 10:33 PM
திருப்பூர்;திருப்பூரில் 85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையை இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.ஆண்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய், அன்னியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைய வேண்டும் என்பது, தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த, 2019பிப்., 10ல், தேர்தல் பிரசாரத்துக்கு திருப்பூர் வந்த பிரதமர் மோடி, 100 படுக்கைகளுடன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதற்காக, 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.முதல் இரண்டு ஆண்டுகள் பணி தொய்வாக இருந்தது. பிறகு வேகமெடுத்த இப்பணி, 2022 நவம்பர் மாதம் நிறைவுற்றது. ஆண்டுக்கு, 4.5 லட்சம் தொழிலாளர்கள், 180 கோடி ரூபாய் வரை தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்துக்கு நிதி செலுத்துவதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணியை விரைந்து முடித்து திறப்பு விழா நடத்த வேண்டும் என பல்வேறு தொழில் அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இன்று காலை குஜராத் மாநிலத்தில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம், திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் இ.எஸ்.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.