உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமராவதி பாசன நீர் கால்வாயை காப்பாற்ற... யாருக்கும் அக்கறையில்லை!கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவை திட்டம்

அமராவதி பாசன நீர் கால்வாயை காப்பாற்ற... யாருக்கும் அக்கறையில்லை!கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவை திட்டம்

மடத்துக்குளம்:பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான கால்வாயில், குமரலிங்கம் பேரூராட்சி குடியிருப்பின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது; பாசன ஆதாரம் பாழாகி, கால்வாயும், நெல் சாகுபடி பாதித்தும் எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி அணையை ஆதாரமாகக்கொண்ட, பழைய, ஆயக்கட்டு பாசனத்தில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது.ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் விளைநிலங்களுக்கு, கால்வாய் வாயிலாக பிரித்தளிக்கப்படுகிறது.அப்பகுதி பசுமைக்கும், நெல் உற்பத்திக்கும் ஆதாரமான பாசன கால்வாய்களின் தற்போதைய நிலை, விவசாயிகளுக்கு கண்ணீர் வரவழைக்கும் நிலையில் உள்ளது.உதாரணமாக குமரலிங்கம் பகுதியில், அமராவதி பாசன நீரை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மடத்துக்குளம் தாலுகாவில், முக்கிய நெல் உற்பத்தி மையமாக இப்பகுதி உள்ளது. ஆனால், பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் நிலை, படுமோசமான நிலையில் உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வடிகால் அமைத்து, நேரடியாக பாசன கால்வாயில், கழிவு நீர் கலக்கும் வகையில் செய்துள்ளனர்.நாள்தோறும், பல ஆயிரம் லிட்டர் கழிவு நீர் பாசன கால்வாயில் கலந்து, விளைநிலங்களுக்கு அந்த தண்ணீர் செல்கிறது. பேரூராட்சி எல்லை வரை தெளிவாக வரும் பாசன நீர், அப்பகுதியை தாண்டும் போது கழிவு நீரால், கருப்பாக மாறி பயணிக்கிறது.துார்வாரப்படாத கால்வாயில், கழிவு நீர் தேங்கும் போது, ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் வாழ், களைச்செடிகள், பாசன கால்வாயை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. பாசனத்துக்கு செல்லும் தண்ணீர், தடைபடும் அளவுக்கு, இத்தகைய களைச்செடிகள் கால்வாய் முழுவதும் காணப்படுகிறது.இதனால், கொசுத்தொல்லையும் அதிகரித்து, அப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். கால்நடைகளும், தண்ணீரை குடிக்க முடியாத சூழல் உள்ளது.இந்த அவல நிலை நீண்ட காலமாக தொடர்ந்தும், பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விவசாயிகள் கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. மேலும், பாசன ஆதாரங்களை ஒட்டி, கழிவுகளை குவிப்பது என சுகாதார சீர்கேடுகள் மிகுந்த பகுதியாக குமரலிங்கம் மாறியுள்ளது.இதே நிலை தொடர்ந்தால், பாசன நீர் முற்றிலுமாக மாசடைந்து விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், விரிவான ஆய்வு செய்து, கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், பாசன கால்வாயை மீட்கவும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பசுமைக்கும், பாசனத்துக்கும் பெயர் பெற்ற அப்பகுதி முற்றிலுமாக பாதிக்கப்படும்.

ஆற்றையும் கவனியுங்க!

அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆற்றின் கரையோரத்திலுள்ள குடியிருப்புகளில் இருந்து நேரடியாக கழிவு நீர் கலக்கிறது. கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில், குப்பை கிடங்காக ஆற்றங்கரையை மாற்றியுள்ளனர். இதனால், ஆற்றுக்கு செல்லவே அப்பகுதி மக்கள் அச்சப்படும் நிலை காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை