கோடை விழாவுக்கு பூங்காவை அழகுபடுத்தணும்! சுற்றுலா பயணியர் கோரிக்கை
வால்பாறை: வால்பாறையில், புதர் மண்டிக்கிடக்கும் பூங்காவை கோடை விழாவுக்கு முன்னதாக அழகுபடுத்த வேண்டும், என, சுற்றுலா பணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. ஆட்சி முடியும் தருவாயில் அவசரக்கோலத்தில் பூங்கா திறக்கப்பட்டது. அதன்பின் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த பூங்கா கடந்த, 2022ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆனால், பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.இந்நிலையில், கடந்த பல மாதங்களாக பூங்கா முறையான பராமரிப்பின்றி, சுற்றிலும் புதர் மண்டி காட்சியளிகிறது. பார்வையாளர்களை கவரும் வகையில், பூச்செடிகள் கூட வைக்கப்படவில்லை. குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி உடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.சுற்றுலா பயணியர் கூறியதாவது:மிகுந்த எதிர்பார்ப்புடன் பூங்காவை ரசிக்க சென்றால், அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. புதர் சூழ்ந்து காணப்படுகிறது. பூங்காவினுள் குழந்தைகளை அழைத்து செல்லவே பயமாக உள்ளது.சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கும் வகையில், மே மாதம் நடைபெறும் கோடை விழாவுக்கு முன்னதாக பூங்காவை அழகுபடுத்தி, அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர். புதுப்பொலிவு பெறும்!
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியருக்காக அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, விரைவில் ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, பூங்காவில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். மழை காலத்துக்கு முன்னதாக, பூங்கா புதுப்பொலிவு பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.