பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் 'சர்வர்' பிரச்னையால் வரி உள்ளிட்டவைகளை செலுத்த முடியாமல், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி, உரிமை கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக, செலுத்தலாம் என்ற திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் கட்டணம் செலுத்த முடிந்தது. ஏமாற்றம்
தற்போது, தொடர்ந்தும், விட்டுவிட்டும் நிலவி வரும் சர்வர் பிரச்னையால் வரி உள்ளிட்ட இனங்கள் செலுத்த ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது.இது குறித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சின்னராஜ் கூறியதாவது: ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்து நேரடியாக பணம் பெறக்கூடாது. அதேபோல செலுத்தப்பட்ட பணத்துக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே ரசீது வழங்கப்படும். கடந்த ஒரு வாரமாக சர்வர் பிரச்சனையால் வரி செலுத்த முடியாமல், பொதுமக்கள் திரும்பி செல்கின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில் இதுவரை, 30 சதவீத வரி மட்டுமே வசூலாகியுள்ளது. வரி வசூலில் தேக்கநிலை நீடிப்பதால், மாவட்ட நிர்வாகத்தினர் அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர். தொய்வு
இப்பிரச்னையால், ஊராட்சிகளில், பிற நபரிடமிருந்து வீடு வாங்கும் நபர்கள், தன்னுடைய பெயருக்கு வீட்டை பெயர் மாற்றம் செய்ய முடிவதில்லை. இதனால் பலர் சொத்து வாங்கியும், குறிப்பிட்ட வீடு அல்லது விவசாய பூமி தன்னுடைய பெயருக்கு மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். வெளியே கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள், பின் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வெளியே வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.மேலும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் பாலமலை மலைப்பகுதியில் நடந்து வருகிறது. வீட்டின் ஒரு பகுதியை கட்டி முடித்தவுடன், அதை அதே இடத்தில் இருந்து போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பகுதியில் டவர் இல்லாததால், பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. இதனால் வீடு கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.ஆன்லைன் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மக்கள் சுலபமாக எங்கு இருந்தாலும் வரி செலுத்தலாம். வெளிப்படை தன்மை உண்டு. தவறு நடக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும், தொழில் நுட்ப ரீதியாக சர்வர் பிரச்னை உள்ளிட்டவை தொடர்ந்து நீடிப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பணம் வசூல் இல்லாததால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள எதிர்காலத்தில் சிரமம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலிக தீர்வு
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' நாள் ஒன்றுக்கு, 500 முதல், 600 ரூபாய் வரை ஊதியம் பெறும் நபர், அப்பணியை விட்டுவிட்டு கடந்த ஒரு வாரமாக ஊராட்சி அலுவலகத்துக்கு வந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பரிதாபம் உள்ளது. இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக ஆன்லைன் பிரச்னையின் போது, ஊராட்சி செயலரே வரி உள்ளிட்ட இனங்களுக்கான தொகையைப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கலாம் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.