பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், குடியிருப்பு பகுதியில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, கோவை மாநகராட்சி கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் புகார் கூறினர். கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய ஜன., 18ம் தேதி வரை, ஒரு மாத காலத்துக்கு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஜன., 1ம் தேதி, 18 வயதை நிறைவு செய்யும் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் ஆகியோர் படிவம், 6ஐ வழங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அ.தி.மு.க.,வை சேர்ந்த சண்முகம், மணிகண்டன், பா.ஜ.,வை சேர்ந்த விவேகானந்தன், செல்வராஜ் உள்ளிட்டோர் அவரிடம் கூறியதாவது: நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து நிரந்தரமாக வேறு ஊருக்கு இடம் மாறியவர்கள் பலரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கோவையில் வசிக்கும் பலர், நரசிம்மநாயக்கன்பாளையம் வந்து அவர்களுக்குரிய எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். இதனால் அவர்களுடைய பெயர், தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஒரே நபர், இரண்டு இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி, பயனில்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.