உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வசூலிக்காத சொத்து வரி ரூ.242 கோடி! மாநகராட்சி வருவாய் பிரிவினருக்கு அழுத்தம் 

வசூலிக்காத சொத்து வரி ரூ.242 கோடி! மாநகராட்சி வருவாய் பிரிவினருக்கு அழுத்தம் 

கோவை : கோவை மாநகராட்சியில், சொத்து வரியாக, இதுவரை, ரூ.276 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.242 கோடி வசூலிக்க வேண்டியிருப்பதால், பணியை வேகப்படுத்த வருவாய் பிரிவினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சியில், 5.65 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். நடப்பு 2023-24ம் நிதியாண்டுக்கு ரூ.401.62 கோடி சொத்து வரி, கடந்த, 2022-23ம் ஆண்டு வசூலிக்கப்படாமல் நிலுவை வைக்கப்பட்ட வரி ரூ.116.94 கோடி சேர்த்து, ரூ.518.57 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும்.இதுவரை, நிலுவை வரியில் ரூ.28 கோடி, நடப்பு நிதியாண்டு கணக்கில் ரூ.248 கோடி என, ரூ.276 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. நிதியாண்டு முடிய இரண்டரை மாதங்களே இருக்கின்றன; இன்னும் ரூ.242.50 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும்.வழக்கமாக மாதத்துக்கு, 8 சதவீதம் வீதம், 10 மாதத்தில், 80 சதவீதம் சொத்து வரி வசூலிக்கப்படும். இதுவரை, 60 சதவீதமே வசூலாகி இருக்கிறது. 20 சதவீதம் வசூலிக்காமல், மாநகராட்சி வருவாய்ப்பிரிவினர் பின்தங்கி இருக்கின்றனர். லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் மாதம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்பதால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சொத்து ஜப்தி என அழுத்தம் கொடுத்து, இம்முறை வரியினங்கள் வசூலிக்க முடியாது. அதனால், பிப்., இறுதிக்குள் வரியினங்களை முழுமையாக வசூலிக்க, பில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுடன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சமீபத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், ஆய்வு செய்திருக்கிறார்.அப்போது, 'வரி வசூல் மிகவும் டல்லாக இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக இளநிலை உதவியாளர்கள் உள்ளனர்; அவர்களை வரி வசூலுக்கு பயன்படுத்துங்கள். மாநகராட்சி வணிக வளாகங்களில் கடை நடத்துவோர் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால் நோட்டீஸ் வினியோகித்து, வசூலிக்கும் பணியை துரிதப்படுத்துங்கள்' என, அறிவுரை வழங்கியுள்ளதாக, வருவாய் பிரிவினர் தெரிவித்தனர்.இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனும், வருவாய் பிரிவினருடன் இன்று (18ம் தேதி) கலந்தாய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ