கோவை:கோவையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு மிகப்பெரிய நீராதாரமான, சின்னவேடம்பட்டி ஏரி - ராஜவாய்க்கால் பகுதிகளை சீரமைக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், வரலாறு காணாத மழை பெய்து, சங்கனுார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 31 ஆண்டுகளுக்கு பின், சின்ன வேடம்பட்டி ஏரிக்கு நீர் வரத்து காணப்பட்டது. சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர், இப்பகுதிகளில் கள ஆய்வு செய்தனர்.இதுதொடர்பாக, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து, கணுவாய் - சின்ன வேடம்பட்டி ஏரி, ராஜவாய்க்காலை மறுசீரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மனு கொடுத்தார்.இதுகுறித்து, செல்வராஜ் மேலும் கூறியதாவது:பருவ மழை தொடர்ந்து பெய்து, தண்ணீர் செல்வதற்கேற்ப வாய்க்கால் வசதி இருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக பெருமழை பெய்வதால், அதற்கேற்ப மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்.துடியலுார் ரோட்டுக்கு மேற்கு வாத்தியார் தோட்ட வாய்க்கால் பகுதிகளை இரண்டடிக்கு ஆழப்படுத்த வேண்டும். வாத்தியார் தோட்டத்தில், சின்னவேடம்பட்டி - கணுவாய் வாய்க்கால் திருப்பத்தின் வடக்கு பகுதியில், உபரி நீர் செல்லும் பகுதியில், 200 மீட்டர் துாரத்துக்கு கான்கிரீட் கரைகளை மூன்றடி உயரத்துக்கு, உயர்த்த வேண்டும்.துடியலுார் மெயின் ரோட்டில் இருந்து, அனுமன் கோவில் வரையுள்ள ராஜவாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புகளை ஐந்தடி உயரத்துக்கு அதிகப்படுத்த வேண்டும்.வெள்ளக்கிணறு குளம் நிரம்பும்போது, வெள்ளக்கிணறு கால்நடை மருத்துவமனை வழியாக தெற்கு குட்டைக்கு தண்ணீர் செல்கிறது. வடக்கு குட்டையில் உபரி நீரை நிரப்பும் வகையில், மதகுடன் கூடிய ஷட்டர் அமைக்க வேண்டும். இதன் மூலம் ஊருக்குள் தண்ணீர் புகுவது தடுக்கப்படும்.ஷட்டரை ஒட்டியுள்ள, வடக்கு கான்கிரீட் கரையை இரண்டு அடிக்கு உயர்த்த வேண்டும். அப்பகுதியில், பொதுமக்கள் மெயின் ரோட்டுக்கு வரும் வகையில், சிறிய பாலம் கட்ட வேண்டும். இதில், அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு பள்ளி அருகில் உள்ள குழாய் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்க வேண்டும். தெற்கு குட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரி, கரையை பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.