உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குப்பை கிடங்காகும் வடக்கலூர் குளம்

 குப்பை கிடங்காகும் வடக்கலூர் குளம்

அன்னுார்: 33 ஏக்கர் குளத்தில் குப்பை கொட்டுவதால் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில், 150க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் வடக்கலூரில் உள்ள 33 ஏக்கர் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வருகிறது. இதில், 50 சதவீதத்துக்கு மேல் குளத்தில் நீர் சேர்ந்துள்ளது. எனினும் குளத்தில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் லோடு கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குளத்தில் நீர் தேங்கியுள்ளது. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதனால் விவசாய பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ஏராளமான குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர். இதனால் நீர் மாசுபடுகிறது. நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு குளத்தை ஒட்டி உள்ள பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடக்கலூர் ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குளத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மயில்சாமி, பொருளாளர் வெள்ளிங்கிரி, முன்னாள் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் விமல்ராஜ், ரங்கசாமி உள்ளிட்டோர் குளத்தில் குப்பை கொட்டும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை