சூலுார்:நீலம்பூர் பை -பாஸ் ரோட்டில் காலை, மாலை வேளைகளில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அவிநாசி ரோட்டில் உள்ள நீலம்பூரில் துவங்கி மதுக்கரை வரை செல்லும் நீலம்பூர் பை - பாஸ் ரோடு, மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பை - பாஸ் ரோடு ஆகும்.திருச்சி ரோடு, அவிநாசி ரோடு வழியாக கேரளா நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்கள், கார்கள், லாரிகள் ஆகியவை இந்த ரோட்டில் இயக்கப்படுகின்றன. இதேபோல், கேரளாவில் இருந்து கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் தான் அதிகளவில் வருகின்றன.அதனால், இந்த ரோட்டில் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் இருக்கும். இரவு நேரத்தில் கார்கள், கனரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பை -பாஸ் ரோட்டுடன் சிந்தாமணி புதூரில் திருச்சி ரோடும், நீலம்பூரில் அவிநாசி ரோடும் சந்திக்கின்றன. வாகன நெரிசல்
காலை மற்றும் மாலை வேளைகளில் பை - பாஸ் ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதால், வாகன நெரிசல் ஏற்பட்டு, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ரோட்டை கடக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லுாரிக்கு செல்வோர், வாகன நெரிசலில் சிக்கி கொள்வதால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிவதில்லை. குறிப்பாக சிந்தாமணிப்புதூர் சந்திப்பில் திருச்சி ரோடு, பை - பாஸ் ரோடு என, நான்கு ரோடுகளிலும் காலை, மாலை வேளைகளில் வாகன நெரிசல் மிக அதிகமாகி வருகிறது.சிக்னலை மதிக்காமல் ஒருவரை ஒருவர் முந்தி செல்வது, ரோடு முழுக்க வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட காரணங்களால், பொதுமக்களால் ரோட்டை கடக்க கூட முடிவதில்லை. அப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். வீதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.