பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விபத்து நிவாரண தொகைக்காக விண்ணப்பித்தவர்களின், விண்ணப்ஙகள் சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்தில் விபத்துகளில் இறப்போர், காயமடைந்தோருக்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்குகிறது. இறந்தோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையும்; பெரும் காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது. அதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர் குடும்பத்தினர், நிவாரண தொகைக்காக, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். கடந்த, மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருந்த விண்ணப்பதாரர்களின் மனுக்கள், ஆவணங்கள் சரியாக உள்ளதா என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: விபத்தில் இறந்தோர், காயமடைந்த குடும்பத்தினர், இறப்பு, வாரிசு, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்குடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி கோட்டத்தில் இதுவரை, 136 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது விண்ணப்பங்கள், வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்பதால், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு, கூறினர்.