... கோவை: பூட்டி கிடக்கும் வீடுகளை முகவரியாக கொடுத்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டு சாவடிகளில் பெயர் இருப்பவர்கள், மரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை, தாசில்தார்களுக்கு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், 32 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேலான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த பணியின் கீழ், ஓட்டு சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, கணினியில் பதிவேற்றி வருகின்றனர்.நவம்பர் 4ம் தேதி தொடங்கிய இந்த வேலை, டிசம்பர் 4ல் முடிகிறது. இறுதி கட்ட வேலைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். ஓட்டு சாவடி அலுவலர் 3 முறை சென்ற போதும், பூட்டியே கிடந்த வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அங்கு சென்று வந்ததற்கான ஆதாரங்களை வைத்து கொள்ளவும், படம் எடுத்து வைக்கவும், அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரிடமும், கட்சி பிரதிநிதிகளிடமும் கையெழுத்து வாங்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளனர். காலமான வாக்காளர் வசித்த வீட்டில், அவரது உறவினர்களிடம் இறப்பு சான்று நகல் அல்லது வேறு ஆதாரம் சேகரித்து வைக்க வேண்டும். ஒரு வாக்காளர் இரு முகவரிகளில் இடம் பெற்றிருந்தால், அல்லது ஒரே முகவரியில் இருந்தாலும், இரண்டு சாவடிகளில் ஓட்டுரிமை இருந்தால், அவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் போட்டோவை நகல் எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றி, மேற்கண்ட 3 பிரிவு வாக்காளர்களின் பெயரை நீக்க, 10 சிறப்பு தாசில்தார்களை கலெக்டர் நியமித்து, அதிகாரம் வழங்கியுள்ளார். தமிழகத்திலேயே இரண் டாவது பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, இரண்டு சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வருவாய் அலுவலர் ஆகியோரின் ஒப்புதலோடு, வாக்காளர்களின் பெயர் நீக்கப்படும்.