உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி தொகுதியில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு: நாட்டை ஆளும் ஓட்டு!ஜனநாயக கடமை ஆற்றி வாக்காளர்கள் பெருமிதம்

பொள்ளாச்சி தொகுதியில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு: நாட்டை ஆளும் ஓட்டு!ஜனநாயக கடமை ஆற்றி வாக்காளர்கள் பெருமிதம்

  பொள்ளாச்சி, ஏப். 20-பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை, 7:00 மணி முதல் வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டினர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், ஆண்கள், 7,73,433, பெண்கள், 8,23,738, மூன்றாம் பாலினத்தவர், 296 என மொத்தம், 15 லட்சத்து, 97 ஆயிரத்து, 467 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தம், 1,715 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், 146 பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இத்தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பேட்' இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

மாதிரி ஓட்டுப்பதிவு

பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் காலை, 6:00 மணிக்கு, முகவர்கள் முன்னிலையில், 'மாதிரி ஓட்டுப்பதிவு' நடத்தப்பட்டது. அதன்பின் ஓட்டுப்பதிவு துவங்கப்பட்டது. ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் ஆர்வம்

ஓட்டுப்பதிவு நாளான நேற்று காலை, 7:00 மணி முதல், ஓட்டுப்போட மக்கள் ஆர்வம் காட்டினர். பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து, வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினர். மாற்றுத்திறனாளிகள், 'வீல்சேரில்' அழைத்துச் செல்லப்பட்டனர்.வயதானவர்களும் ஆர்வமாக குடும்பத்துடன் வந்து ஓட்டுப்போட்டுச் சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக, 'சாமியானா' மற்றும் தென்னை ஓலை பந்தல் போடப்பட்டிருந்தது.நகரப்பகுதியில், காலை, 8:00 மணி முதல் ஓட்டுச்சாவடியில் இருந்த கூட்டம், மதியம், 12:00 மணிக்கு பின் குறைந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக ஓட்டுச்சாவடியில் கூட்டம் இல்லாததால், வந்த வாக்காளர்கள் உடனடியாக ஓட்டு அளித்துச் சென்றனர்.மீண்டும், மாலை, 3:00 மணிக்கு பின் ஓட்டுப்பதிவு சுறுசுறுப்படைந்தது. மாலை, 6:00 மணியை கடந்து சில ஓட்டுச்சாவடிகளில், 'டோக்கன்' பெற்று காத்திருந்து ஓட்டு அளித்தனர்.

ஓட்டுப்பதிவு நிலவரம்

காலை முதல் வாக்காளர்கள் கூட்டமாக வந்து ஓட்டுப்போட்டதால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து 630 பேர் ஓட்டு போட்டு இருந்தனர்; 9.55 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.காலை, 11:00 மணிக்கு, 3,45,223 பேர் ஓட்டு அளித்து இருந்தனர்; 21.61 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மதியம், 1:00 மணிக்கு, 6,40,267 பேர் ஓட்டு அளித்து, 40.08 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மாலை, 3:00 மணிக்கு, 8,53,861 ஓட்டுகள் பதிவாகின; 53.45 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.மாலை, மாலை, 5:00 மணி நிலவரப்படி, 64.99 சதவீதமும், 6:00 மணி நிலவரப்படி, 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு பதிவாகியுள்ளதாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைதியாக நடந்தது தேர்தல்!

பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஓட்டுச்சாவடி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 263வது ஓட்டுச்சாவடி மற்றும் வால்பாறை தொகுதியில், 214வது ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின.இதனால், சிறிது நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. அதன்பின், அதிகாரிகள் இயந்திரங்களை சரி செய்து மீண்டும் ஓட்டுப்பதிவை துவக்கினர்.மரப்பேட்டை அருகே இருந்த ஆதரவற்றோர் முகாமில், 26 பேர் உள்ளனர். இவர்கள், மரப்பேட்டை பள்ளியில் ஓட்டு அளிக்க ஆர்வமாக வந்தனர். அதில், நடக்க முடியாத வயதான மூதாட்டிகளை அங்கு இருந்தவர்கள், துாக்கி சென்று ஓட்டுச்சாவடியில் விட்டனர். அவர்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது பெருமிதமாக உள்ளதாக தெரிவித்தனர்.முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும், ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது கடமையாற்றி மகிழ்ச்சியுடன் திரும்பினர். எவ்வித, பதட்டமும், பிரச்னையும் இன்று தேர்தல் அமைதியாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ