உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மீண்டும் உடைந்தது குடிநீர் பிரதான குழாய்; சீரமைக்கும் பணி விறுவிறு

 மீண்டும் உடைந்தது குடிநீர் பிரதான குழாய்; சீரமைக்கும் பணி விறுவிறு

சரவணம்பட்டி: கோவை நகர மக்களுக்கு பில்லுார் அணையில் இருந்து மூன்று திட்டங்களின் கீழ் குடிநீர் தருவித்து, வினியோகிக்கப்படுகிறது. அணை பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து வர, 1989ல் 1,000 எம்.எம். விட்டமுள்ள சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டது. பில்லுார்-2 திட்டத்தில் அக்குழாய் பயன்படுத்தப்படுகிறது. 36 ஆண்டுகளாகி விட்டதால், பலமிழந்திருக்கிறது. தண்ணீர் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைகிறது. கடந்த மாதம் சரவணம்பட்டியில் உடைந்த போது, பழைய குழாயை வெட்டி அகற்றி, புதிதாக 6 மீட்டர் நீளத்துக்கு இரும்பு குழாய் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக, 10 நாட்கள் வரை மாநகராட்சியின் வடக்கு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பம்ப்பிங் ஸ்டேஷன் பகுதியில் மின்சாரம் தடைபட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தபோது, தண்ணீரின் வேகத்தால் அழுத்தம் தாங்காமல், சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் இரவு 11.30 மணியளவில் குழாய் உடைந்தது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து 'பம்ப்' செய்வது நிறுத்தப்பட்டது. குழாயில் வந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சிமென்ட் குழாயை அறுத்தெடுக்கும் பணி நேற்று நடந்தது. அப்பகுதியில், 6 மீட்டர் நீளத்துக்கு இரும்பு குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி இன்று 11 மணிக்குள் முடிக்க, மாநகராட்சி குடிநீர் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாளை (இன்று) மதியத்துக்குள் குழாய் மாற்றும் பணியை முடித்து, மாலை நேரத்தில் 'பம்ப்' செய்ய முயற்சித்து வருகிறோம். மாற்று ஏற்பாடாக, பில்லுார்-3வது திட்ட குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இருப்பினும் இத்திட்டத்தில் பயனடையும் 34 வார்டுகளுக்கும் வழங்க வாய்ப்பு இல்லாததால், குடிநீர் வினியோக இடைவெளி ஒரு நாள் தாமதமாகும். கரட்டுமேடு பகுதியில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் தொட்டி வரை சுமார் 8 கி.மீ. துாரத்துக்கு புதிதாக இரும்பு குழாய் பதிக்க மதிப்பீடு தயாரித்து வருகிறோம். கருத்துரு தயாரித்து அரசின் ஒப்புதல் பெற்று அப்பணி மேற்கொண்டால், இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ