- நிருபர் குழு -பி.ஏ.பி., பாசன திட்டத்தில், நான்காம் மண்டலத்துக்கு தண்ணீர்திறக்கப்பட்டுள்ளநிலையில், பாசன நீர்திருட்டை தடுக்க அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பி.ஏ.பி., பாசன பகுதி, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மொத்தம், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து, நீர் வினியோகிக்கப்படுகிறது. பருவமழை இல்லாதது; அணைகளின் நீர் இருப்பு குறைவு போன்ற சூழலில், முதலாம் மண்டல பாசனத்துக்கு இரண்டரரை சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.முதல் மண்டல பாசனம், கடந்த, பிப்., 12ல் துவங்கியது. முதல் சுற்று கடந்த, மார்ச், 12ல் நிறைவு செய்யப்பட்டது.பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு, கடந்த மாதம், 27ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.பருவமழை பெய்யாத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பாசன நீர் திருட்டும் அதிகரித்துள்ளது.இதனையடுத்து, பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையிலும், கடைமடை வரை பாசன நீரை கொண்டு சேர்க்கும் வகையிலும், நீர் வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, போலீசார், மின் வாரியம் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழு, ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய், உடுமலை கால்வாய் என அனைத்து கால்வாய் பகுதிகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதலாம் மண்டல பாசனத்தில், இரண்டாவது சுற்று தண்ணீர் வழங்குவதால் தண்ணீர் கடைமடை வரை கொண்டு செல்ல கண்காணிப்பு குழு வாயிலாக, இரவு, பகலாக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.வறட்சியான சூழலில் தண்ணீர் திருட்டு முழுமையாக கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சிஞ்சுவாடி அருகே தண்ணீர் திருட்டுக்காக, அமைக்கப்பட்ட குழாய் அகற்றப்பட்டு புகார் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தண்ணீர் திருடுவது கண்டறியப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அவர்கள் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்படும்.அரசு மானியங்கள் உள்ளிட்டவை ரத்தாகும். எனவே, தண்ணீர் திருட்டில் ஈடுபடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஜீப்பை கண்டதும் ஓட்டம்!
நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலத்தில் பாசனம் துவங்கியுள்ள நிலையில், நீர் திருட்டை தடுக்கும் வகையில், ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.ஒரு சில பகுதிகளில், அதிகாரிகள் ஜீப் வருவதை பார்த்து, திருட்டுக்கு பயன்படுத்தும் குழாய்களை எடுத்து விட்டு, ஓடி விடுகின்றனர். இதனையும் தடுக்கும் வகையில், விவசாயிகள் ஒத்துழைப்புடன் திருட்டு நடக்கும் பகுதிகளில், ரகசிய ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.