உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரம்பரியம் மிக்க பொங்கல் பண்டிகையால்... மகிழ்ச்சி பொங்கட்டும்!பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

பாரம்பரியம் மிக்க பொங்கல் பண்டிகையால்... மகிழ்ச்சி பொங்கட்டும்!பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

பொள்ளாச்சி:'பொங்கி வரும் பொங்கலை போன்று, கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும்,' என்ற வேண்டுதலுடன், பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகள், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கான, பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயம் சார்ந்த பொள்ளாச்சியில், அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர, நெல், கரும்பு, வாழை, பாக்கு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்யப்படுகின்றன. பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பிலும், விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆண்டுதோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.பண்டிகையை முன்னிட்டு, வீடுகளை சுத்தம் செய்தல் மற்றும் வெள்ளையடிக்கும் பணியில், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் போகியும், அடுத்த நாள் பொங்கல் பண்டிகை, அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாடுகளுக்கு தேவையான கயிறு உள்ளிட்ட ஆபரணங்கள் விற்பனையும் நடக்கிறது.

விற்பனை துவக்கம்

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக, சேலம், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கரும்பு கட்டு, கட்டாக கொண்டு வரப்பட்டுள்ளன. வியாபாரிகள் கூறுகையில், 'தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. இந்நிலையில், மார்க்கெட்டுக்கு கருப்பு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை. ஒரு கட்டு (15 கரும்பு), 500 - 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மஞ்சள், ஒரு ஜோடி, 80 - 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரும் நாட்களில் விலையும், விற்பனையும் விறு, விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

கோலப்பொடி

மார்கழி மாதம், அதனை தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகையிலும் கோலமிடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. இதற்காக கோலங்களை வரைந்து, அதற்கு தேவையான கலர் பொடிகளை துாவுவது வழக்கமாக உள்ளது.இந்தாண்டு, கோலத்துக்கு தேவையான கலர் பொடிகள், ரெடிமெட் வகை கோலங்கள், கோலப்பொடிகள் ஆங்காங்கே விற்கப்படுகின்றன. கலர் கோலப்பொடிகள் (ஏழு பாக்கெட்), 50 ரூபாய்; பெரிய கவர் கோலப்பொடி (ஏழு பாக்கெட்), 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதேபோன்று, பொங்கலுக்கு தேவையான, புத்தாடைகள், பானைகள், பித்தளை பொங்கல் பாத்திரம், பச்சரிசி, மண்டைவெல்லம் போன்றவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

செழிக்க வேண்டும்

பொள்ளாச்சி பகுதியில் தேங்காய்க்கு விலை இல்லை, தென்னையில் நோய் தாக்குதல் போன்ற பிரச்னைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொங்கி வரும் பொங்கலை போன்று, கவலைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான நாட்களாக மாற வேண்டும். விளை பொருட்களுக்கு விலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

புகையின்றி போகி கொண்டாடுவோம்!

பொள்ளாச்சியில் உள்ள பள்ளிகளில், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறியதாவது:பழைய பொருட்களை எரிப்பதால், காற்றில் கந்தக டை ஆக்ைஸடு, நைட்ரஜன் ஆக்ைஸடு உள்ளிட்ட நச்சுப்புகையின் அளவு அதிகரிக்கிறது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து விடுபட மக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை கைவிட வேண்டும். மாற்றாக பழைய பொருட்களை விற்பனை செய்து அதன் வாயிலாக வரும் தொகையை கொண்டு குழந்தைகளுக்கு பொங்கல் பரிசுகள் வாங்கி வழங்கலாம்.பழைய பொருட்களை எரிப்பதால், காற்று மாசுபட்டு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். சுவாசக்கோளாறு, இருமல், கண், மூக்கு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால், பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட போகி பண்டிகையன்று மாசு இல்லாமல் கொண்டாடி சுற்றுச்சூழலை காக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை