பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், 12.47 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்டவர்களுக்கு இன்று, 16ம் தேதி மாத்திரை வழங்கப்பட உள்ளது.சிறார்கள் குடற்புழுவால் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் பரவலை தடுக்க ஆண்டுதோறும், தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதார துறை சார்பில் ஒன்று முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படும்.மாவட்ட சுகாதார துறை சார்பில், இந்தாண்டு கடந்த, 9ம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதில், 9.53 லட்சம் குழந்தைகள், 20 - 30 வயதுக்குட்பட்ட, 2.91 லட்சம் பெண்கள் என, மொத்தம், 12.44 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல், விடுபட்ட குழந்தைகளுக்கு மீண்டும் இன்று, 16ம் தேதி மாத்திரைகள் வழங்கப்படுகிறது.கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள, பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை சேர்ந்த, குழந்தைகள், மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தாண்டு, லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே கட்டமாக அனைவரும் மாத்திரை எடுத்துக் கொண்டால் மட்டுமே, குடற்புழுக்களால் ஏற்படும் நோய்களை தவிர்க்க முடியும்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று, 16ம் தேதி மீண்டும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார். உடுமலை
திருப்பூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, ஒன்று முதல் 19 வயது வரை உள்ள, 7.8 லட்சம் குழந்தைகள், 20 முதல், 30 வரை உள்ள (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) 2.04 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்தது.கடந்த, 9ம் தேதி மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையம், கிராம சுகாதார செவிலியர் வாயிலாக, அங்கன்வாடி மையங்கள் உதவியுடன் காலை முதல் மாலை வரை 'அல்பெண்டசோல்' மாத்திரை வினியோகிக்கும் பணி நடந்தது.ஒன்று முதல், 19 வயதுள்ளவர்களுக்கு, 6.29 லட்சம் (89 சதவீதம்) மாத்திரைகளும், 20 முதல், 30 வயதுடையவருக்கு, 1.57 லட்சம் மாத்திரைகளும் (79 சதவீதம்) வழங்கப்பட்டது.இதேபோல, 19 வயதுக்கு உட்பட்டோருக்கு, 70 ஆயிரம் மாத்திரைகளும், 30 வயதுக்கு உட்பட்டோருக்கு, 42 ஆயிரம் மாத்திரைகள் இன்னமும் வழங்க வேண்டியிருக்கிறது.மீதமுள்ள மாத்திரைகள் இன்று வினியோகிக்கப்படும், என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.