| ADDED : ஜன 15, 2024 11:13 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கோட்டை ஈஸ்வரன் கோவிலில் , நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்திலும் ஒவ்வொரு சன்னதியிலும், மாவிலை, தென்னை கீற்றுகள், வாழை குருத்து, கரும்புகள் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. சங்கமேஸ்வரசுவாமிக்கு சகலதிரவிய அபிஷேகத்திற்கு பின்பு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதே போல் ஆறுமுக சுப்ரமணியர், அம்பாள், நடராஜர் சன்னதிகளில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள், குடும்பம் சகிதமாக வழிபாடு செய்தனர். கோனியம்மன், தண்டுமாரியம்மன், புலிய குளம் முந்திவிநாயகர், ஈச்சனாரி விநாயகர், கோட்டை மேடு கரிவரதராஜ பெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி கோவிலில் திரளான பக்தர்கள், குடும்பம் சகிதமாக வழிபாடு செய்தனர்.