| ADDED : ஜன 12, 2024 12:13 AM
கோவை;ரூ.5 கோடி கடனை திருப்பி கேட்ட பெண் உட்பட இருவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோவை கணபதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 51, பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கான்ட்ராக்ட் தொழில் செய்து வரும் காளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 37, என்பவர் கடந்த, 2019ம் ஆண்டு ரூ.5 கோடியை கடன் வாங்கி உள்ளார். அதன் பின் அந்த பணத்தை சரவணன் தராமல் ஏமாற்றி தலைமறைவானார். இதற்கிடையே சரவணன் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் கோர்ட்டுக்கு வருவதாக செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் கோர்ட்டுக்கு சென்று சரவணனை சந்தித்தார்.அப்போது சரவணன் வழக்கை முடித்துவிட்டு சிங்காநல்லுார் பகுதிக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி செந்தில்குமார் தனது அலுவலக பணியாளர் உமாதேவி என்பவரை அழைத்து கொண்டு சென்றார். சிங்காநல்லுார் குளத்தேரி அருகில் நின்றிருந்த சரவணனை, சந்தித்து செந்தில்குமார் பணத்தை கேட்டார். அதற்கு சரவணன் தன்னால் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் செந்தில்குமாரை, தகாத வார்த்தைகள் திட்டி அவர் தாக்க முயன்றார். உமா தேவி அவரை தடுக்க முயன்றார். அதனால் அவரையும் தகாத வார்த்தைகள் திட்டி சரவணன் தாக்கியுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.