| ADDED : ஜூன் 08, 2024 04:49 AM
கடலுார் : கடலுார் அருகே வீசிய சூறைக்காற்றில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதமானதால், விவசாயிகள் கலையடைந்துள்ளனர்.கடலுார் அருகே கேப்பர் மலை பகுதியில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்பகுதியில் நேந்திரம், பூவம், ஏலக்கி, செவ்வாழை உள்ளிட்ட பல வகையான வாழை பயிர் செய்துள்ளனர். குலை தள்ளிய நிலையில் வாழை மரங்கள் நன்கு வளர்ந்திருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக் காற்று வீசியது. இதில், பூ தள்ளிய மற்றும் பிஞ்சு வைத்திருந்த வாழை மரங்கள் அடியோடும், பாதியிலும் முறிந்து சாய்ந்து விழுந்தன. மலைக் கிராமங்களாகிய ராமாபுரம், ஒதியடிக்குப்பம், குமளங்குளம், வழிசோதனைப்பாளையம், வெள்ளக்கரை, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் கூறுகையில், தற்போது வீசிய சூறை காற்றில் வாழை முழுவதும் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து வாழை பயிர் செய்தோம். இந்த தொகையை எப்படி ஈடு கட்ட முடியும் என தெரியவில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து, வாழை பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஆண்டு மழையால் சேதமான வாழை பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். ஆனால், நிவாரணம் வழங்கவில்லை. எனவே, கண்துடைப்பிற்கு வராமல், அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிககை வைத்துள்ளனர்.