வேப்பூர்: வேப்பூரில் அரசு பஸ்சில் 13கிலோ கஞ்சா கடத்தி வந்த அரசு ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி புறப்பட்ட அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக, கடலுார் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்.பி., தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை செய்தனர்.நள்ளிரவு 1:00 மணியளவில் வேப்பூர் சர்வீஸ் சாலையில் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 13 கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் அதை கடத்தி வந்த நான்கு பேரை பிடித்து, வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், ராமநத்தத்தை சேர்ந்த கார்த்திக், 24; தொழுதுாரை சேர்ந்த சக்திவேல், 25; லோகநாதன், 22; புலிகரம்பலுாரை சேர்ந்த மணிவண்ணன், 23; என தெரியவந்தது.அதில், சக்திவேல் போஸ்ட்மேனாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. நண்பர்களான இவர்கள் தொழுதுார், திட்டக்குடி பகுதிகளில் கஞ்சா விற்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்திற்கு கஞ்சா வாங்க சென்றுள்ளனர். அங்கு கஞ்சா கிடைக்காததால் ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டையில் ரூ. 2 லட்சத்திற்கு 13 கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர்.அதில் ரூ. 20 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்து மீதி பணத்தை வங்கி கணக்கில் அனுப்புவதாக கூறி புறப்பட்டனர். சூலுார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து, சென்னையிலிருந்து ராமநத்தத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளனர்.வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக், சக்திவேல், லோகநாதன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா, 4 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.