| ADDED : ஜூலை 12, 2024 05:15 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வியாபாரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை தொடர்ந்து எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் விருத்தாசலத்தில் இருந்து கஞ்சா சப்ளை ஆவது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோணு மகாராணா,25; திருப்பூர் ரவிக்குமார் மகன் சதீஷ்,30; என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கடலுார் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்வதும், இவர்களிடம் இருந்து கம்மாபுரம் அடுத்த சு.கீணனுார் கதிர்வேல் மகன் ராஜா,36; விருத்தாசலம் திரு.வி.க., நகர் காசிம் பாஷா மகன் சதாம்,23; ஆகியோர் கஞ்சா வாங்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.அதன்பேரில், சோணுமகாராணா உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.