| ADDED : மே 24, 2024 05:10 AM
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுவன் ஓட்டிய தனியார் ஆம்புலன்ஸ் மோதி மூன்று பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில், நேற்று முன்தினம் சிகிச்சைப் பெற்ற நோயாளி ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். நோயாளியை ஏற்றிச் செல்ல கடலுாரைச் சேர்ந்த மாருதி ஆம்மினி தனியார் ஆம்புலன்ஸ், மருத்துவமனை வளாகத்தில் அவசர பிரிவு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.நோயாளியை ஸ்டச்சரில் வைத்து எடுத்து வர உள்ளே சென்றபோது, தனியார் ஆம்புலன்சில் வேலை செய்யும் சிறுவன், திடீரென ஆம்புலன்ஸ்யை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.அப்போது, ஆம்புலன்ஸ் மோதியதில் கடலுார் புருகீஸ்பேட்டையை சேர்ந்த குமார் மனைவி உஷா, 52; நெய்வேலி டவுன்ஷிப் 9வது வட்டம் பிச்சை என்பவர் மனைவி கமலா, 29; பண்ருட்டி ஒறையூர் சக்திவேல் மனைவி மாலதி, 29; ஆகியோர் காயமடைந்தனர். உடன் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். தனியார் ஆம்புலன்ஸ் விபத்து சம்பவம் மருத்தவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விபத்து குறித்து கடலுார் புதுநகர் எஸ்.ஐ., கதிரவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.