விருத்தாசலம் : கள்ளக்குறிச்சியில் 57 பேரை பலிகொண்ட கள்ளச்சாராய வழக்கில், விருத்தாசலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 57 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளச்சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர், விழுப்புரத்தில் வசிக்கும் புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான வேதிப்பொருளை வாங்கியது தெரிய வந்தது. அதையடுத்து, மாதேஷை கைது செய்து விசாரித்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், செராமிக் கம்பெனி நடத்தி வரும், விருத்தாசலம் எஜமான் நகர் ஜோதிமணி, 39; வீரபாண்டியன் தெருவை சேர்ந்த கேசவகுமார், 39, ஆகியோருக்கும் சட்டவிரோதமாக எம்.டி.ஓ., மற்றும் ஓலிக் ஆயில் விற்பனை செய்ததாக, மாதேஷ் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி போலீசார், ஜோதிமணி, கேசவகுமாரை நேற்று முன்தினம் பிடித்து வுிசாரித்தனர். இருவரும், மாதேஷிடம், சட்ட விரோதமாக ஆயில் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.இருவரும், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழில் செய்வதற்காக ஆயில் வாங்கி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 25 பாரல் ஆயில் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், அதனை ஜி.எஸ்.டி., செலுத்தாமல் முறைகேடாக வாங்கி உள்ளது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜோதிமணி, கேசவகுமாரை விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.அதையடுத்து சட்டவிரோதமாக ஆயில் வாங்கியதாக, ஜோதிமணி, கேசவகுமார் மீது விருத்தாசலம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 320 லிட்டர் எம்.டி.ஓ., ஆயிலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.