உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிப்காட் துவங்கி 8 ஆண்டுகளாகியும் பயனில்லை; ஆட்சியாளர்கள் மீது வேப்பூர் மக்கள் அதிருப்தி

சிப்காட் துவங்கி 8 ஆண்டுகளாகியும் பயனில்லை; ஆட்சியாளர்கள் மீது வேப்பூர் மக்கள் அதிருப்தி

கடலுார் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள 100க்கும் அதிகமான கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்கின்றனர். மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு, எள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்வர். அதில், ஆண்டுதோறும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் மகசூல் குறைவு, பருத்தி, எள் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டமடைகின்றனர்.இப்பகுதி மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு 30 கி.மீ., தூரம் பயணித்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சென்று படித்து பட்டம் பெற்றும் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். குடும்ப சூழ்நிலை கருதி வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்கின்றனர்.கடந்த 2013ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேப்பூர் அடுத்த விளம்பாவூரில் சிட்கோ அமைக்கப்படும் என அறிவித்தார்.அதன்படி, 45 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 120 பிளாட்கள், தார்ச்சாலைகள், நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது.5 கி.மீ. தூரத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, 30 கி.மீ., தூரத்தில் விருத்தாசலம் ரயில் நிலையம் உள்ளதால், விரைவில் தொழிற்சாலைகள் வந்து, விவசாயிகளுக்கு உரிய விலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் அடைவர் என எதிர்பார்த்தனர்.ஆனால், அ.தி.மு.க., ஆட்சி மாறி, தி.மு.க. ஆட்சி அமைத்து கடலூர் மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் கிடைத்தும், சிட்கோவில் தொழிற்சாலைகள் ஏதுமின்றி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பின் தங்கியே உள்ளது.சிட்கோவில் உணவு ஆயில், பால் பொருட்கள், இயற்கை உரம், கால்நடை தீவன உற்பத்தி, மின் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பு, டெக்ஸ்டைல்ஸ், சூரியகாந்தி எண்ணெய் ஆலை, மக்காச்சோளம் கூழ் ஆலை உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் துவக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அதன் மூலம் படித்த மற்றும் படிக்காத ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதுடன், வேளாண் தொழில் செய்யும் விவசாயிகளும் பயன் பெறுவர். இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதி சிட்கோவில் தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேப்பூர் பின் தங்குகிறது

திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் போதிய இட வசதி இல்லாத போதும் ஆளும் கட்சியின்'விநாயகர்' பெயர் கொண்ட அமைச்சர் முயற்சியில் தொழிற்சாலைகள், தொழிற்பயிற்சி பள்ளி, அதிகளவு அரசு பஸ்களை அப்பகுதி மக்களுக்கு பெற்று தருகிறார். ஆனால், விருத்தாசலம் தொகுதியின் வேப்பூருக்கு காங்., எம்.எல்.ஏ., பா.ம.க., ஒன்றிய சேர்மன் இருந்தும் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை