| ADDED : மே 28, 2024 05:00 AM
விருத்தாசலம், : நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துாரில் உள்ள நெல் வயல்களில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, புழுவின் தாக்குதல், தன்மை குறித்து பார்வையிட்டு, மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.அதில், தற்போது நிலவி வரும் வானிலையின் காரணமாக நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவின் தாக்கம் தென்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாக இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும்.தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வென்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும். இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்போ சல்பான் 400 மி.லி., அல்லது கார்டாப் ைஹட்ரோகுளோரைடு 600 கிராம் என்ற அளவில் காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.