விருத்தாசலம்: 'உள்ளூர் வேட்பாளர் சிவக்கொழுந்துவை வெற்றி பெறச் செய்யுங்கள்' என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., விருத்தாசலம் தொகுதியில் ஓட்டு சேகரித்தார்.கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தெற்கு, வடக்கு ஒன்றிய பகுதிகளான வண்ணாங்குடிக்காடு, வேட்டக்குடி, டி.வி.புத்துார், கொல்லத்தங்குறிச்சி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் சிவக்கொழுந்து ஓட்டு சேகரித்தார்.அப்போது, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசுகையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரது ஆசி பெற்ற வேட்பாளர் சிவக்கொழுந்து. உள்ளூரை சேர்ந்தவர், நமது பகுதி மக்களின்பிரச்னைகள் குறித்து லோக்சபாவில் குரல் கொடுப்பார்.இந்த தொகுதி தி.மு.க., எம்.பி., ரமேஷ் எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. நான் எம்.பி.,யாக இருந்தபோது, திட்டக்குடி வரை பசாலை அமைக்க மத்திய அரசிடம் போராடி நிதி பெற்றுத் தந்தேன். அதுபோல், சிவக்கொழுந்து எம்.பி.,யாகி நல்லது செய்வார் என்றார்.வேட்பாளர் சிவக்கொழுந்து கூறுகையில், 'கடலுார் தொகுதி வளர்ச்சிக்காக பணியாற்றுவேன். விருத்தாசலத்தில் நலிவடைந்த பீங்கான் தொழிற்பேட்டை, பூட்டிக் கிடக்கும் சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விருத்தாசலத்தை மையமாக வைத்து, மருத்துவக் கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் தம்பிதுரை, வேல்முருகன், நகர செயலாளர் சந்திரகுமார், முன்னாள் சேர்மன் பாஸ்கரன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் ராஜ், துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.