| ADDED : ஆக 04, 2024 11:52 PM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையம் பழனி மகன் அங்கப்பன் என்பவர் இறந்தார். இவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் பாலுார் கெடிலம் ஆற்றில் நடந்தது. இதில், சன்னியாசிப்பேட்டை, முத்துநாராயணபுரத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது குயிலாப்பாளையம் காலனியை சேர்ந்த 14 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் இயற்கை உபாதைக்கு கெடிலம் ஆற்றுக்கு சென்றார். அங்கு முத்துநாராயணபுரத்தை சேர்ந்தவர்கள் கிஷோரை கிண்டல் செய்து, தாக்கினர். தகவலறிந்த குயிலாப்பாளையம் காலனியை சேர்ந்தவர்கள் அங்கு சென்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக்கொண்டனர். இதில் குயிலாப்பாளையம் காலனி, சன்னியாசிப்பேட்டை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர்.இதனால் இரு தரப்பினரும் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த சிறுவன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் முத்துகிருஷ்ணாபுரம் பிரசாந்த்,23; சன்னியாசிப்பேட்டை சதீஷ்ராஜ்,23; முத்துநாராயணபுரம் தினேஷ்,19; மணிரத்தினம்,22; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.