| ADDED : ஜூன் 16, 2024 10:47 PM
கடலுார் : மேல் அழிஞ்சிப்பட்டு, ராமாபுரம் பகுதிகளில் விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை இடையே 180 கி.மீ., துாரம் ரூ.6,267 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நான்கு வழிப்பாதை பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து பல்வேறு கிராம பகுதி பொதுமக்கள் கலெக்டர் அருண்தம்புராஜிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் கலெக்டர் அருண்தம்புராஜ், மத்திய நகாய் சாலை அமைப்பு இன்ஜினியர்களுடன் நான்கு வழி சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம்-கடலுார் இடையே உள்ள மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்மட்ட பாலத்திற்கு இருபுறமும் கனரக வாகனங்கள் செல்லும்படி சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு நகாய் அமைப்பு அதிகாரிகள், அந்த இடத்தில் சாலைகள் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சர்வீஸ் ரோடு அமைக்க முடியாது என தெரிவித்தனர்.பின்னர் அந்த இடத்தில் வாகனங்கள் செல்லும்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேப்போன்று கடலுார் அடுத்த ராமாபுரம் பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர், அந்த பகுதியில் அதிக ரோடுகள் பிரிந்து செல்வதால், விபத்துக்கள் நடக்காமல் இருக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.இதற்கு நகாய் அமைப்பு அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். ராமாபுரம் பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது போன்று பல்வேறு இடங்களில் பிரச்னைகள் இருப்பதை சரி செய்யப்படும் தெரிவித்தனர்.