கடலுார்: எதிரில் நிற்பது மாமனாக இருந்தாலும் சரி, மச்சானாக இருந்தாலும் சரி, குறி தவறாமல் அம்பு எய்த வேண்டும் என, கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூறினார்.கடலுாரில் தேர்தல் பிரசாரதில் அவர் கூறியதாவது;சொந்தம் இல்லை, பந்தம் இல்லை என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உறவுகள் வேறு, அரசியல் வேறு என்று நான் கூறுகிறேன். மகாபாரதத்தில் உறவினர்களாக இருந்த கவுரவர்கள், பாண்டவர்கள் கூட சொந்தம் இல்லை, பந்தம் இல்லை, உறவும் இல்லை, ஒட்டும் இல்லை என, பாடவில்லை.நாம் எல்லாம் தர்மத்தின் பக்கம் நிற்கக்கூடிய பாண்டவர்கள். எதிரே நிற்பது மாமனாக இருந்தாலும் சரி, மச்சானாக இருந்தாலும் சரி, அவர்களை குறி தவறாமல் நாம் அம்பு எய்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தது மகாபாரதம், பகவத் கீதை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இதில் உறவுக்கு இடமில்லை.நாங்கள், கொள்கைக்காக போராடுகிறோம். அவர்கள் தனியாக நின்றிருந்தாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைபடவில்லை. போயும், போயும் பா.ஜ.,வுடன் சேர்ந்து அவர்களின் பெயரை கெடுத்து, இந்த மக்களை படுகுழியில் தள்ள முயல்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கப்போவதில்லை.அ.தி.மு.க.,வினர் மோடி எங்கள் 'டாடி' என கூறினார். அவர்கள் மோடியிடம், அ.தி.மு.க.,வை அடகு வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, அனைத்து பலன்களையும் அனுபவித்துவிட்டு தற்போது நாடகமாடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.